Flowers - Myspace Glitters

திங்கள், 23 பிப்ரவரி, 2009

தேவதைகள்

எலும்புத் துண்டை தூக்கி
எறிந்தால் வாலாட்டும்
நாய்கள் என நரிகள் களிக்க
குள்ள நரி சாயம்

வெளுத்துப்போச்சு
டும் டும் என
நாய்கள் கொண்டாட
நரிகள் ஊளையிட
நாய்கள் குரைக்க

கூத்தாடிகளுக்குக்
கொண்டாட்டம்
நடுத்தெருவில்
தேவதைகள்
திண்டாட்டம்

திங்கள், 16 பிப்ரவரி, 2009

நார்வே நடந்து பார்த்தது
அமைதிப்புறா அலைந்து பார்த்தது
அகிம்சை அல்லல் பட்டது
ஆயுதம் தலை தூக்கியது
புலிகள் பதுங்குவது
பாய்வ‌த‌ற்கென்றாலும் கிளிகளின்
சிறகொடியும் ஒலிகள் கேட்கிறதா
வலிக்கிறது மனம்
சிறை பிடித்த
சீதையின் துயர்துடைக்க
அனுமன் சென்றான் தூது
முன்தோன்றிய
மூத்தக்குடி காக்க அதிபதிகள்
அணுவைக் கூட அனுப்பவில்லை தூது
முல்லைக் காடு இடுகாடாகிறது

புதன், 4 பிப்ரவரி, 2009

முத்துக்குமரன் -இலங்கையில் போர்நிறுத்தக் கோரி தீக்குளித்தவர்

அங்கேச் சுடுகிறான்
இங்கே சுட்டுக்கொண்டாய்

உன்னைப் பறித்தது
தமிழ்ப் பற்றோ
அரசியல் பற்றோ
நாட்டுப் பற்றோ...
உன் உயிர்ப் பற்று
எங்கேப் போனது?

பத்தோடு பதினொன்று
அத்தோடு நீயுமொன்றென
துதி பாடி
இரங்கற்பா எழுதிவிட்டு
தூசி தட்டி துப்பாக்கித்
தூக்கிவிட்டான்

ஆட்டுமந்தைபோல்
கை கால் இழந்து
பாம்புக் கடி மறத்தவனை
ஓருயிர்
சரித்திரம் மாற்றிவிடுமென
தப்புக் கணக்குப் போட்டாயே?

சாதிக்கப் பிறந்தவன் நான்
சாகப் பிறந்தவனில்லை யென
பாசக்கொடி நீ தூக்கி
அடக்குமுறையை
அடக்கம்
செய்ய மறந்தாயே?

உனக்கு நீயே
கொள்ளியிட்டாய்
உன் குடும்பத்தை
தவிக்கவிட்டாய்
உன் இழப்பைத் தவிர
வேறென்ன லாபம்?


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

துடுப்புகள்

உறங்கி கிடக்கும்
சொர்க்கத்தை உசுப்பிவிட
அறிவுக் கடலில் ஆழம் தேடி
உறங்கிப் போன மனிதர்களுக்கு
ஒளிந்து கிடக்கும் உண்மைகளை
அமிழ்ந்து போகும் அமுதங்களை
அடையாளம் காட்டத் துடிக்கும்
ஞானத் துடுப்புகள்
பேனா முட்களுடன்...