Flowers - Myspace Glitters

புதன், 4 ஆகஸ்ட், 2010

தாஜ்மகால்



கற்களில் பட்டை தீட்டிய வைரம் நீ !
சொற்களில் நீட்டமுடியாக் கவிதை நீ !

உயிருக்குள் ஒளிந்திருக்கும் காவியம் நீ !
கல் வரைந்த காதல் ஓவியம் நீ!

ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும்
அமைதிப் புறா நீ!

எந்தச்சாயமடித்தாலும் காதல்
வெளுத்துவிடுமெனச் சொல்லும்
வெள்ளை ரோஜா நீ !

கல்லறை வரை காதலிக்கச் சொல்லும்
மெழுகுப் பாறை நீ !

காதல் உலக அதிசயமல்ல
அவசியமென உணரவைத்த பளிங்குப்பூ நீ!

நதியோரம் பிறந்த அதிசயமே...
நானூறு ஆண்டுகளைக் கடந்தும் உன் காதல்
நித்திரையிலும் நிமிர்ந்து நிற்கு்ம் ரகசியம் என்ன?

காலம் சென்றாலும் காதல் நிலைக்குமென
உன் கற்கள் உரசி நிற்பதில் தெரிகிறது

காதல் வந்தால் மனசு இளமையாகிறது

எல்லோரும் தேடுகிறோம்
என்றென்றும் காதலோடு இளமையும் வேண்டுமென

செவ்வாய், 27 ஜூலை, 2010

'மெய்டு' அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

திங்கள், 12 ஜூலை, 2010

The Dance of Eunuchs by Kamala Das - தமிழில்

The Dance of Eunuchs by Kamala Das - தமிழில்

திருநங்கைகளின் நாட்டியம்


எங்கும் ஒரே சூடு அனல் காற்று
அந்த கோஜாக்கள் வந்து ஆடுமுன்
அகண்ட பாவாடைகள் சுற்றிச் சுற்றி வட்டமிட
தாளக்கட்டைகள் கிண்கிண்ணென ஒலிக்கிறது
கொலுசுகள் ஜல் ஜல்லென குலுங்குகிறது
அந்த குல்மொகருக்குக் கீழே
நீண்ட பின்னல் காற்றில் ஆட
கருவிழிகள் மிளிர
ஆடுகின்றனர் ஆடுகின்றனர்
குருதிப்பெருக ஆடுகின்றனர்...
கன்னங்களில் பச்சைக்குத்தி
மல்லிகையைக் கூந்தலில் முடிந்து
ஒரு சிலர் நல்ல கருப்பு நிறத்திலும்
மற்றவரோ மாநிறத்திலும்
குரல் தடித்திருந்தாலும்
பாடுவதோ சோகக்கீதம்...
அன்பர்களின் வெளுத்துப்போன சாயத்தையும்
பிறக்காத குழந்தையாய் கைவிடப்பட்டதையும்
ஒரு சிலர் தாளம் போட மற்றவரோ மார்பிலத்து
ஓங்கிய குரலில் ஆடிப்பாடி ஆனந்தப்பரவசமடைகின்றனர்...
பாதி எரிந்து கிடக்கும் ஈமவிறகைப்போன்ற
ஒல்லியான வறண்ட தேகம்
காய்ந்து இற்றுப்போன உடற்கூறுகள்...
அங்கே காக்கைகள் கூட மரத்தின் மீது
அமைதியாய் உட்கார்ந்திருக்க
பிள்ளைகளோ கண்களை அகல விரித்து
ஆச்சர்யமாய் பார்க்க
அனைவரும் பாவப்பட்ட இந்த உயிருள்ள ஜீவன்களைப்
பார்த்துக்கொண்டிருக்க திடீரென எதிர்பாராக் கிளர்ச்சியுடன்
மேகங்கள் உரசிக்கொண்டு இடிமின்னலுடன்
மழை தூரலிட ஆரம்பித்தது.
அந்தச் சாளரத்தின் தூசில் கலந்து வருகிறது
பல்லிகள் சுண்டெலிகளின் சிறுநீர் வாசனையும்...

புதன், 17 மார்ச், 2010

முதல் குழந்தை

புத்தனே
ஆசையைத் துறக்கும் மனசை
அப்படியே கொண்டு வா

வள்ளுவனே
அறத்தோடு பொருளையும் காக்கும்
பொறுமையை கொண்டு வா

அண்ணலே
சத்தியத்தை உருக்கி வந்து
நல் சக்தி கொடு

விநாயகா
அடங்காப் பசியோடு
அழியாத உடலைத் தூக்கி வா

நபியே
கருங்கூந்தலோடு
நற்குணச் செடிகளையும் நட்டு வை

ஏசுவே
அன்பெனும் போதிமரத்தை இவள்
பக்கத்தில் ஊன்றி வை

ஓ... நல்லோர்களே
அத்தனையும் கொண்டு வந்து
இந்த மர்மக்குகைக்குள் திணித்திடுங்கள்

உப்பு நீரைக் கீறிக்கொண்டு
நல்முத்து வந்து பிறக்குமென்றேன்

நீ பூத்து முடிப்பதற்குள் ஒவ்வொரு
நொடிக்குள்ளும் நூல் நூத்துக் கிடந்ததடி

தங்கமே
அத்தனையும் தாங்கி வருவாயென
என் மனக்கோட்டை திறந்தே கிடந்ததடி

மலர்க்குடையாய் பறந்து
என்னுள் இறங்கி வந்தாய்

அவசரத்தில் என்னை மட்டும்
உரித்து வைத்ததென்னடி

எட்டி உதைத்தவளே
என்னுயிரைத் தின்றவளே

என்னுள் நீயிருந்த நாட்கள்
இன்னும் இனிக்குதடி

கண்ணும் மூக்கும் வைத்து
வரைந்து பார்த்தேன்

காவியமாய் நீ வந்து
என்னுள் கலந்தாயடி...