புத்தனே
ஆசையைத் துறக்கும் மனசை
அப்படியே கொண்டு வா
வள்ளுவனே
அறத்தோடு பொருளையும் காக்கும்
பொறுமையை கொண்டு வா
அண்ணலே
சத்தியத்தை உருக்கி வந்து
நல் சக்தி கொடு
விநாயகா
அடங்காப் பசியோடு
அழியாத உடலைத் தூக்கி வா
நபியே
கருங்கூந்தலோடு
நற்குணச் செடிகளையும் நட்டு வை
ஏசுவே
அன்பெனும் போதிமரத்தை இவள்
பக்கத்தில் ஊன்றி வை
ஓ... நல்லோர்களே
அத்தனையும் கொண்டு வந்து
இந்த மர்மக்குகைக்குள் திணித்திடுங்கள்
உப்பு நீரைக் கீறிக்கொண்டு
நல்முத்து வந்து பிறக்குமென்றேன்
நீ பூத்து முடிப்பதற்குள் ஒவ்வொரு
நொடிக்குள்ளும் நூல் நூத்துக் கிடந்ததடி
தங்கமே
அத்தனையும் தாங்கி வருவாயென
என் மனக்கோட்டை திறந்தே கிடந்ததடி
மலர்க்குடையாய் பறந்து
என்னுள் இறங்கி வந்தாய்
அவசரத்தில் என்னை மட்டும்
உரித்து வைத்ததென்னடி
எட்டி உதைத்தவளே
என்னுயிரைத் தின்றவளே
என்னுள் நீயிருந்த நாட்கள்
இன்னும் இனிக்குதடி
கண்ணும் மூக்கும் வைத்து
வரைந்து பார்த்தேன்
காவியமாய் நீ வந்து
என்னுள் கலந்தாயடி...
புதன், 17 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)