Flowers - Myspace Glitters

வெள்ளி, 8 பிப்ரவரி, 2008

இன்று புதிதாய் பிறப்போம்




இன்று புதிதாய்ப் பிறப்போம் எனறெந்தன்
தலைப்பை இயம்பியவுடன்
நினைவில் வந்து சென்றான் மா கவி
எண்ணமதைத் திண்ணமுற இசைத்து என்று.

தேனில் விழுந்த ஈ போல் நம்
பழைய வழக்கங்கள் மு்த்தப் பொய்களானாலும்
பண்பாடு என்று சொல்லி களிப்போடு
மையல் கொள்ளும் இந்த தீபாவளி

மயிலிறகின் வருடலோடு
சில நிழலோவியங்கள்
நெஞ்சில் நிறைவாய் என்றும்...

நல் பச்சரிசி மாவெடுத்து
பக்குவமாய் அதை அரைத்து
மனமுருகி மாக்கோலமிட்டு பின்
கை நிறைய மனம் நிறைய
மறக்காமல் உள்ளங்கால் நிறைய
மருதாணியிட்டு
கை கால் நீட்டி
நெட்டியும் முறித்து நீண்டு படுத்தால்
மத்தாப்பூச் சிரிப்போடும்
மருதாணிச் சிகப்போடும்
இடியுடன் கூடிய சரவெடிச் சத்தத்தில்
தீப்பொறிப் பறக்க
தீபாவளிப் பிறக்கும்.

பட்டாசுப் புகையுனுள் பகலவனும்
பதுங்கியே வருவான்

இதழோரம் அமிழ்தூறும்
பட்சணமில்லா பண்டிகையா
உரல் நழுவி சுருண்டு விழும்
மொறு மொறு தேன் குழலும்

பாலின் சுவையில் பாய்ந்த நெய்
சீனியோடு கலப்பு மணம் புரிந்த
பனிக்கூழ் பால் கோவாவும்

உன்னுள்ளே நானும் என்னுள்ளே நீயுமென்று
பின்னிப்பிணைந்து vஜால் விடும் ஜாங்கிரியும்

கங்கா ஸ்நானம் போதுமா
சர்க்கரைப் பாகில் மு்ச்சடக்கி
முத்துக் குளிக்கும் குளோப் ஜாமு்னும்

கையுரலில் இடி வாங்கி தப்பியோடிப் போனாலும்
கலிபோர்னியா காட்டுத்தீயில் கருகிய
வெள்ளையெலிபோல் நம் அதிரசமும்

இப்படி முதிர்ச் சுவைப் பண்டங்களை
முந்தி முந்தி உண்டாலும்
தீபாவளி லேகியம் மட்டும்
லேசில் இறங்காது

மல்லிகையிடையே மரிக்கொழுந்தும் மணக்க
நம் மஞ்சள் மாதர்
தக தகவென தங்கத்தோடும்
சரசரக்கும் பட்டுடை மேனியோடும்
முக்தியடையந்த பூரணத்தில்
இன்று புதிதாய் பிறந்தோமென்றொரு
பட்சி பறந்திடும் மனத்திலே.

நா சுவை கூடியவுடன்
நகைச்சுவை வெடிகளும்
நடு நடுவே வெடிப்பதுண்டு
மனைவி கணவனிடம் கேட்டாள்
நாம் ஏன் தீபாவளிக் கொண்டாடவேண்டுமென்று
கணவரோ மிகுந்த பொறுப்போடு
நரகாசுரன் என்ற கொடியவன் இறந்த நாளை
நாம் கொண்டாடுகிறோமென்றார்
பட்டென்று சொன்னாள் மனைவி
நீங்கள் தான் இன்னும் இருக்கிறீர்களே என்று

எள்ளி நகையாடும் மாதர் தம் அடுத்தாத்து
அம்புஜத்தைப் பார்த்து விடும்
பெருமு்ச்சுக்கும் அளவில்லை

இன்று நாம் ரேசில் செல்லும் குதிரையாய்
எதையோத்தேடி ஓடினாலும்
பக்கத்து வீட்டுப் பைங்கிளி முகம் பார்க்க
சில திங்கள் ஆகிறது

உறவுகளின் அருமை
ஊனமாக்கினாலும்
பல்லின ரோஜாக்களின் வரவால்
புத்துயிர் பெறுகிறேhம்

அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்குள்
மின்னிடும் தீபாவளி
பட்டுத் தெறித்தது போல்
சிலப் பொட்டு வெடிச் சத்தம்
பட்டும் படாமல் கேட்டாலும்
அணுகுண்டு சரவெடி சத்தமின்றி
'சப்' பென்றுதான் இருக்கிறது

சிராங்கூன் ரோடு ரங்கோலி வளைவுகளில்
ஆசையெனும் செருப்பணிந்து
கண்களால் கடைகளை அளந்து நம்
இளங்கொடிகள் கடுகளவுப் பொட்டை கூட
விடாமல் தேடித் தேடி வாங்கி

'பெருமாளே' என்று கிரெடிட் கார்டு பிதுங்கினாலும்
project give counter ஐப் பார்த்தால்
காகம் போல் கரைகிறது மனம்
பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதல் சுகம் தானே...

நம் வீட்டு கெட்டி உருண்டை உடைகிறதோ இல்லையோ
உலக உருண்டை உதிர்வது தெரிகிறதா எவருக்கேனும்

முளை கட்டிய தாய்ப் பால் தானே சொட்டுவது போல்
அண்டார்டிகாவில் பனி உருகி வழிகிறதாம்

பனிப் பெருகி கடல் மட்டம் உயர்ந்தால்
உலகம் அழிவை நோக்கும் அபாயம் உண்டுதானே

ஐ.நா சபை அகிம்சை தினம் கொண்டாடும் வேளையில்
நம் ஹரோக்களுக்கு அடியும் உதையும் அரிவாளும்
அடையாளச் சின்னம்

புலிகள் மான் வேட்டைக்குச் செல்வதுண்டு
மனித வேட்டைக்குமள்ளவாச் செல்கின்றன.

கடிகார முள் மீதமர்ந்து
சிறு மு்ளையும் பெரு மு்ளையும்
உழைத்து உழைத்துக் களைக்கிறது
உடலும் ஊடலும் பெருக்கிறது

நம் நவீனத் தீபாவளி ஆத்மாவை
மனிதநேயத்தை கைப் பிடித்துச் செல்ல வேண்டும்

நஞ்சற்ற கள்ளங்கபடமற்ற தீபாவளியை
அடுத்த தலைமுறைக் கொண்டாடவேண்டும்

சகாராவில் காதல் பூ பூத்துக்கொண்டிருக்கும் போது
நம் நெஞ்சங்களில் புத்தொளிப் பிறக்காதா என்ன!

பட்டாம்பூச்சியின் கையில் சிறகைக்கொடுத்து
பறந்து வா என்று சொல்லி கூட்டுப்புழுவாக்க வேண்டாம்
சுற்றித் திரிந்து பறந்தோடி வா என்று விட்டு விடுவோம்

சென்றதினி மீளாது என்பதை இருத்தி
புன்னகை நட்பு காதலோடு கலந்துறவாடி
இன்று புதிதாய்ப் பிறக்கும் இந்த தீபாவளியோடு
நாமும் புதியாய் பிறப்போம் என்றும்
புதிதாய் இருப்போம்.


ஓலி 96.8 வானொலி - 10.11.2007

கருத்துகள் இல்லை: